Thursday, May 26, 2011

காபி..காபி.. மேரே தில் மே!

 எனது தந்தை அரசாங்க உழியத்தில் இருந்ததால், பல ஊர்களுக்கு மாற்றலாகி சென்று கொண்டேயிருந்தார்! கூடவே நாங்களும்!

ஒவ்வொரு ஊரிலும், பல்வேறு குணாதிசியங்களும், பழக்கங்களும் கொண்ட மனிதர்களின் சிநேகம்! சொந்த ஊரில் அவசர வேலை ஏற்படும் பொழுதுகளில், வேலை செய்யும் ஊரிலேயே குழந்தைகளான எங்களை சில நாட்கள் விட்டுச் செல்லும் அளவிற்கு சிநேகிதத்திற்கு மதிப்பிருந்த காலமது!


அரசாங்க வேலைகளில், அப்போது பிராமண மக்கள் சற்று அதிகம்!அதனால் எனது தந்தைக்கு அவர்களின் சிநேகமும், பழக்கங்களும், ஒட்டிக் கொண்டதில் ஆச்சரியமில்லை!

அதில் ஒன்றுதான் பில்டர் காபி!"






சிறிய காபிக் கொட்டை அரைக்கும் இயந்திரம் ஒன்று, சமயலறை அலமாரியின் சிமெண்ட் கல்லில் பொருத்தப் பட்டிருக்கும்! கோவை சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளில் மட்டுமே (பச்சை நிறத்தில்) காபிக் கொட்டை கிடைக்கும்!


தினமும் காலையில் தாயாரால், கையளவு காபிக் கொட்டை வாணலியில் வறுக்கப்பட்டு, காற்றில் உலர்த்தப்பட்டு என்னிடம் தரப்படும்! அரவை எந்திரத்தில் போட்டு எடுப்பது என் வேலை!
நாங்கள் இருந்த சில ஊர்களில், பசுமாட்டை வீட்டிற்கே ஓட்டிவந்து, பால் கறந்து ஊற்றிக் கொடுப்பர்!
பால் காயுவதற்கு சற்று முன்னர், அப்பொது அரைத்த காபித் தூள், பில்டரில் தண்ணீர் கலக்கப்பட்டு, சொட்டு சொட்டாக இறங்கி கொண்டிருக்கும்!

சிறிது நேரத்தில் சரியான விகிதக் கலவை செய்யப்பட்டு, டபராவிலும், லோட்டாவிலும் காபியை ஆற்றியபடியே முன்வாசலுக்கு அம்மா செல்வார்!
எக்ஸ்பிரஸில் முகம் தொலைத்த எனது தந்தை, காபி வாடையால் கவரப்பட்டு பேப்பரை சிறிது விலக்கி, காபியுடன் மீண்டும் மறைந்து கொள்வார்!


எங்கள் வீட்டு காபிக்கு , சொந்த/ நட்பு வட்டாரத்தில் பலத்த புகழ்! எப்படியும் காலை/மாலையில் குறைந்தது 4 - 5 ஓசி காபி விசிறிகள் விஜயமுண்டு! வருத்தமேதுமின்றி பெருமையாக அவர்களுக்கு எனது அம்மா உபசரிப்பார்!

பல வருடங்களாக உழைத்த அந்த காபிக்கொட்டை அரவை இயந்திரம் , அதன் பற்களின் தேய்மானத்தால், ஒரு நாள் அட்டாலி ஏறியது! கசப்பின் காரணமாக பால்ய வயதில், காபியின் பக்கம் அதிகம் சென்றதில்லை!கல்லூரி பருவத்தில் தேநீரின் அறிமுகம்! வீட்டில் பில்டரில், வறுத்து அரைக்கப்பட்ட தூள் அகன்று, கடையிலுருந்து சிக்கரி கலந்த காபித்தூள் பில்டரில் இறங்க ஆரம்பித்தது!
தந்தையும் காலையில் மட்டுமே காபி: மற்ற வேளையில் தேநீர் என்று மாறிக் கொண்டார்!


இப்படியாக இல்லத்தில் மெல்ல காபியின் அஸ்தமனம்! வெகுநாட்கள் நீடிக்கவில்லை அந்தநிலை! என் மனைவி வரும்போதே, சூப்பர் சைஸில் காப் பில்டருடன் வந்து சேர்ந்து கொண்டார்! மனைவியின் வீட்டில் பில்டர் காபியில் டிகிரியே பெற்றுள்ளார்களாம்!

தந்தை மறுபடியும் காபிக்கே மாறி விட்டார்1 காலையில் பூஸ்ட் மட்டுமே அருந்தும் நான் கடுமையாக கிண்டலுக்கு உள்ளாகி, எனது கையிலும் காலப் போக்கில் காபித் தம்ப்ளர் திணிக்கப்பட்டுவிட்டது!


டிகிரி காபிக்கு உகந்தது பசுமாட்டுப் பால் ஒன்றே! பேக்கெட் பால் தேநீருக்கு சுமாராக இருக்கும்! காபிக்கு சகிக்காது!






டிகிரிக் காபி சூட்சமங்கள்:

1. பசும்பால் மட்டுமே! தண்ணீர் கலக்கக் கூடாது! காபியின் தேவைக்கேற்ப அவ்வப்போது காய்ச்சிக் கொள்ள வேண்டும்!
2. 20 - 30 சதம் சிக்கரி கலந்த காபித்தூள் நலம்!
3. பில்டரை சுடு தண்ணிரில் அலசி, பொருத்தி, மேல் பாகத்தில் ஒரு தேக்கரண்டி காபித் தூளுக்கு 10 - 12தேக்கரண்டி அளவு சூடான நீர் சேர்த்துக் கொள்ளவும்! சிறிது அஸ்காவும் போட்டுக் கொள்ளவும்1 இது மெதுவாக, திடமாக டிகாக்சன் இறக்க உதவும்!

4.பால் + டிகாக்சன் + சர்க்கரை = 1:7 - 10

காபியால் உற்சாகம், ஆனந்தம் கிடைப்பினும், பெண்கள் காபியைக் குறைத்துக் கொள்வது நல்லது! குறிப்பாக சைவ உணவு மட்டுமே, எடுத்துக் கொள்ளும் பெண்டிர்!





காபி உடலில் வைட்டமின் Bன் அளவை குறைத்து விடுகிறது! இதனாள் நாளடைவில் எலும்பு தேய்மானம் ஏற்பட்டு, மூட்டுவலியில் கொண்டுவந்து நடமாட்டத்தை முடக்கிவிடுகிறது! எனது அம்மா எலும்புத் தேய்மானத்தால் பாதிக்கப்பட்டு, காபியைவிட்டு, சுமார் 20 வருடங்களாகிவிட்டது!

காபி... மேரா தில்!




2 comments:

  1. ஆஹா பில்டர் காபி பற்றி காபி மனம் வீசும் பதிவு.. சூப்பர் நன்றி சார்

    ReplyDelete
  2. எல்.கே சார்!


    காபி மார்னிங்!

    ReplyDelete