Sunday, August 28, 2011

அக்கா அருந்ததி ராய்!

  அன்னா ஹசாரேவை, மேல்தட்டு நடுத்தட்டு மக்களின் பிரதிநிதி! அவர் மாற்று காந்தியல்ல! அவர் மக்கள் ஆதரவைப் பெற்றாலும், அவரை போல நான் மாற விரும்பவில்லை என திருமொழி மலர்ந்துள்ளார்! மேலும் ஹசாரே நடந்து வந்த பாதையில், அவர் நடந்து வந்த விதம் குறித்தும், விமர்சித்து கண்டங்களை எழுப்பியுள்ளார்!

அன்னாவுக்கு தன்னைப்போல, தன் அபிமான இயக்கத்தைப் போல கடைத்தட்டு மக்களின்பிரச்சனைகளின் மேல் அக்கறையில்லை என் குற்றமும் சாட்டியுள்ளார்!


தீவிரப் புரட்சியாளர்களின் மானசீக தலைவியாக மாறியுள்ள அருந்ததி, நாட்டில் எந்த விஷயமானாலும்  கீழ்த்தட்டு மக்களுக்கு மட்டுமே போராடும் உரிமை உள்ளது, அதனையும் அவர்கள் சார்பாக போராடுவதற்கு எமது இயக்கத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதைப் போலப் பேசி வருகிறார்!

மாற்றுப் போராளிகளை மட்டம் தட்டுவதும், அவர்தம் செயலில் குற்றம் காண்பதும், அவர்தம் தகுதியை ஏளனம் செய்வதும் - பிரபாகரனின் வீழ்ச்சிக்குப் பிறகும் இவர்கள் புரிந்து கொள்வதில்லை போலும்!


"எங்கோ போன மாரியாத்தா!
 என்ற மேல ஏறாத்தா!" எனும் கதையாக மாற்றுப் போராளிகளை பின் தொடரும் மக்களையும், நிறபேதம், வர்க்கபேதம் காட்டி வைதுள்ளார்!





ஒன்றை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்! அன்னா மக்களைத் திரட்டவில்லை! மக்கள் எண்ணம் தான் அன்னாவின் மூலம் வெளிப்பாடாயிருக்கிறது! அதற்குக் காரணம் தொடர்ச்சியாக வெளியான அரசியலர்/அதிகாரிகள்/பெருமதிபர்கள் கூட்டணியினர் நடத்திய உழல்கள், கொள்ளைகள், அபகரிப்புகள் மற்றும் கறுப்புப் பண முதலீடுகள் குறித்த செய்திகளும், அவற்றை அரசாங்கம் மறைக்க எடுத்த முயற்சிகளும்!

மாற்றுப் போராளிகளின் இலக்கும் குறிக்கோளும், நம்மில் இருந்து வேறுபட்டிருப்பதால், அவர்கள் நாம் குறை கூறுவது அறிவார்ந்த செயலும், நன்மையளிக்கும் பயனும் இல்லாதது!

அன்னாவின் போராட்டம் பொதுப் பிரச்சனை அடிப்படையில் அமைந்துவிட்டது! அருந்ததி குறிப்பிட்டுள்ள பிரச்சனைகள் பிராந்திய அடிப்படையில் அமைந்துள்ளது! பிராந்திய பிரச்சனைகள் அந்த அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே உண்மையான வேகத்தையும், மற்ற மக்களுக்கு அனுதாபத்தை மட்டுமே கொடுத்து வருகிறது! இது ஒரு இயற்கையான நிகழ்வு!

அன்னாவின் போராட்டத்தில் செய்தி ஊடகங்களின் பங்கே, பிரதானமெனினும், மக்களின் ஆதரவின்றி எந்தப் போராட்டத்தையும் தொடர்ச்சியாக எடுத்துச் செல்லமுடியாது! இப்போது கூட அருந்ததி ராய்,வெகுஜன/கம்யுனிஸ அபிமான ஊடகமான 'ஹிந்து' வாயிலாக, வெளியிட்டாதாலே, பரவலாக சென்றடைந்தது! எனினும் மக்கள் ஆதரவு இல்லாததால் அன்னாவுக்கு எதிரான, சிறு அலையாக மாறி வலுவிழந்துவிட்டது!

அருந்ததி அபிமான இயக்கங்களின் கொள்கைகள், விரும்பும் மாற்றங்கள் நியாயமானவை என்றாலும், இயக்கவாதிகளின் இயக்கங்கள் உணர்ச்சிமிக்கதாயும்,வன்முறைக்குட்பட்டு இருப்பதாலும், வெகுஜன அபிமானத்தை பெறுவது கடினமாயும் உள்ளது! போராட்டங்கள் குழுக்கள் அடிப்படையில் நடைபெறுவதால், தகுதியான தலைமைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது!


அருந்ததி செய்ய வேண்டியதெல்லாம், தீவிர போராட்ட குழுக்களை ஒருங்கிணத்து, தகுதியான தகுதிகளை கொண்ட தலைமைகளைத் தேர்ந்தெடுத்து, வன்முறை பாதையைத் தவிர்த்தால், வெகுஜன ஆதரவு தானே கிடைக்கும்!

மக்களின் தொடர் ஆதர்வின்றி எந்த இயக்கமும் வெற்றி காண இயலாது!

தமக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பதால், மக்களை திட்டிப் பயனில்லை!
தமக்குக் கிடைக்காத மக்கள் ஆதரவு, மாற்றுப் போராளிகளுக்கு கிடைக்கிறதே என்று வயிறு எரிந்தால் மட்டுமே ஜெயமில்லை!


தேவை சுய விமர்சனமும், வன்முறை விலக்கலும், தகுதியான தலைமையும்!

போராளி குழுக்களின் மானசீகத் தலைவியான அருந்ததிக்கு அந்த தகுதி உள்ளது!

செயல் படுத்தினால்,
அருந்ததி
அன்னாவைப் போல்,
அக்கா அருந்ததியாக
உருவெடுக்கலாம்!



Sunday, August 21, 2011

சென்ற ஊரைச் சொல்லவா? - 1

 நிற்க நேரமில்லை!
உருப்படியா வேலையில்லை!

இது கொங்குப் பழமொழி! யாரைப்பற்றி என்றால், அது நம்ம பைரவர் பற்றித்தான்!அதை போலவே தான் நம்மில் பலரும்!
நானும் அதில் ஒருவன்!

இதை ஜோதிட சாஸ்திரத்தில் சகட யோகம், என்பர்!

சதா சஞ்சாரம்! வேலைக்காகவோ, வேலைத்தேடியோ,இலக்கின்றியோ அலைவதே, இதில் சேரும்! அப்படி சஞ்சரிக்கும் போது, எம் மனதில் படிந்தவை, இங்கே!

கோவையில் சமீபத்தில் தான் ஆர்.எஸ் புரத்திலும், ப்ரூக்ஃபீல்ட் மாலிலும் KFC கோழி வறுவல் கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது! கூட்டம் அலை மோதுகிறது! வசூல் அபாரம்! என்ன, வயிறு மட்டும் நிறைய மாட்டேங்குது! பர்ஸ் கரையாமல், அமெரிக்கன் கோழி வறுவல் வேண்டுமெனில் சிடி டவர் ஒட்டலில் உள்ள CFC செல்லலாம்!

 

KFC, மெக்டோனால்ஸ், மேரிஃப்ரவுன் இவையெல்லாம் வழங்கும் கோழி வறுவலை விட, நமது இந்திய ருசியில், நல்ல முறுவலில் வழங்கும் இரு நிறுவனங்கள்:

1.பிக் சிக் : நெய்யிலா வறுக்கிறார்கள் என எண்ணத் தூண்டும்! Now @ Erode!
2.சிக் கிங்: கொச்சி நகரில் எம்.ஜி ரோட்டில் உள்ளது! இறால் வறுவல் ருசியோ ருசி!

கொச்சி நகரைச் சுற்றியுள்ள ரிசார்ட்களில், குறிப்பாக குமரகத்தில், பொடி மீன் வறுவல் என்று ஒரு ஐட்டம் கொடுக்கிறார்கள் பாருங்கள்! அல்புதம்!( மலையாளம்)
குமரகம் ரிசார்ட்களில், ஒன்றிரன்டைத் தவிர மற்றவை எல்லாம் கொள்ளைக் கும்பலே!சாப்பாடு சகிக்காது! ஹவுஸ் போட் சுற்றிபார்க்க மட்டும்! நண்பர்களோடு சென்றால் மட்டும் தங்குங்கள்! மது பிரியர்களுக்கு நல்ல கள் கிடைக்கும்!




கனவுகளை வளர்த்துக் கொண்டு மூணாறு சென்று விடாதீர்! மூணாறு - தேவிகுளம் சாலை மட்டுமே காட்சிகள் நன்றாக இருக்கும்! கோடையில் சென்று விடாதீர்! வெந்து விடும்! உடுமலை வழியில் செல்லும்போது யானைக்குடும்பம் சாலையைக் கடந்து செல்லுவதைக் காணும் வாய்ப்பு காலையிலும், மாலையிலும் கிட்டும்!

நான் ரசித்தவை!

உதய பானு தெலுங்கிலும், கன்னடத்திலும் கவர்ச்சி பாம்! அவரின் கண்கவர் நடனத்தை இங்கு கண்டு களியுங்கள்:

ஆபாச அசைவுகள் இல்லாத ரம்மியமான பாடல் காட்சி!



  மீண்டும் சந்திப்போம்!

Monday, August 15, 2011

சுதந்திர சிந்தனைகள்!



64 வருட சுதந்திர பாரதம், வாழ்த்திக் கொள்ளுவோம்!

இந்நன்னாளில் சுதந்திரப் போர் தியாகிகளை மனதில் இருத்தி, வந்தனம் செய்வோம்!

இனிவரும் நம் சந்ததிகளுக்கு முடிந்தவரை சுற்று சூழலைக்  காப்பாற்றி கொடுப்பொம்!



The shadow of a child is seen against the Indian national flag during a rehearsal for Republic Day celebrations

இன்று சுதந்திரம் பற்றி நிறையப் படித்ததாலும், தொலைக்காட்சிகளை கண்டு களித்ததாலும், சிந்தனைக் குதிரை சற்றேசூடாகி, கனைத்தவை இங்கே!

 * பணமும் பதவியும் என்றுமே தகுதியுள்ளவனை, சென்றடைவதில்லை! 


  * நல்லவன் நாடாளுவதில்லை! உழைப்பவன் செல்வனாவதில்லை!


 * ஊழல்வாதிகளுக்கு சிறந்த தண்டனை, சொத்து பறிமுதலும், பத்து தலைமுறைக்கு பதவியேற்கத் தடையும்!


  *இந்த அளவு சுதந்திரம் எந்த நாட்டிலும் இல்லை! காப்பாற்றி கொள்ளுங்கள்!#என்.ஆர்.ஐ தோழன்!


 * பொதுவெளியில் கழிக்கும் உரிமையைப் போல், சிறந்ததொரு சுதந்திரம் இல்லை காண்!


 * நவீன திருதராட்டினன்! தன் அரசின் ஊழல்களைப் பற்றி அறியேன் எனும் தலைமை ஆட்சியாளன்!


 * திருட்டு ஆட்சியாளன், அவனை தேர்ந்தெடுத்த மாக்களின் பிரதிநிதியே! பிரதிபலிப்பே!





நம்மில் சுயநல மிகுந்திருக்கும் வரை ஊழலை களைய முடியாது!

சிறிது சிறிதாக கரைக்க முடியும்! அதற்காண ஒரு சிறு முயற்சியே, ஊழல் தடுப்புச் சட்டம்!

இந்தச் சட்டம் முழுத்தீர்வு இல்லையெனினும், ஊழல் வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகத் திகழட்டும்!

வெல்க பாரதம்! வாழிய தமிழ்த்திருநாடு!







Sunday, August 7, 2011

ஆலயவழிபாடு எதற்கு?

 நாம் பிறக்கும்போது எதையும் எதிர்பார்த்து இவ்வுலகிற்கு வருவதில்லை!ஆனால் நாம் வளருங்கால், எதிர்பார்ப்புகளும் அவற்றின் எண்ணிக்கைகளும், நம்மில்/சுற்றத்தில் வளருகின்றன! இறக்கும் நொடிவரை அது நம்மை தொடர்கிறது! இறக்கிறோம், எண்ணிலடங்கா நிறைவேறாதவைகளோடு!


எதிர்பார்ப்புகள் இல்லாத மனிதன் ஆச்சரியமானவன்!
ஆனால் அபூர்வமானவன்!

எதிர்பார்ப்புகள் இல்லதாவனே, கடவுள்!
கடவுள், நம்மில் எதையும் எதிர்பார்ப்பதில்லை!
நாம் தான் கடவுளிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்! அன்றாட வாழ்வின் தேவைகளை, நிறைவேற்ற அவரின் உதவியை நாடுகிறோம்!

வழிபாட்டுத்தலங்களில் பெருகும் கூட்டம், அதிர வைக்கிறது! சில சமயம் பலியும் வாங்குகிறது!



ஒருபுறம் நாத்திக, பகுத்தறிவு பிரச்சாரங்கள் மக்களை ஈர்த்தாலும், வயது எற ஏற கடவுளை சார்வது பெரும்பாலும்  தவிர்க்க முடிவதில்லை!

நாம் சார்ந்துள்ள உலகின், ஆசா பாசங்கள்/தேவைகள், உடல்/மன மாறுபாடுகள், நம்மை அமைதியையும்,தீர்வுகளையும் அதிசக்தியான கடவுளிடம் தேட வைக்கின்றன!

நம் நம்பிக்கையே கடவுள்! இந்த பிரபஞ்சங்கள் எல்லம் ஒரு சக்திக்கு கட்டுப்பட்டுது என்று நம்புகிறோமே! அது தான் கடவுள்!


மனிதன், தான் நம்பும் கடவுளை ரூபமாகவோ/அரூபமாகவோ மனதில் உணருகிறான்!







உடலை இயக்கும் உயிரை ஜீவாத்மாவாகவும், உலகை இயக்கும் உயிரை பரமாத்மாவாகவும் உணருகிறான்!

பரமாத்மாவில் இருந்து, ஜீவாத்மா வெளியாகி இவ்வுலகில் உலாவி,கரைந்து மீண்டும் பரமாத்மாவில் இணைவதாக நம்புகிறான்!இந்த நம்பிக்கையே மனிதனை, உடலாலும் மனதாலும் இயங்க வைக்கிறது!




தன்னுடையத் தேவைகளை பெற்றவரும், உற்றவரும் பார்த்துக் கொள்ளும்வரை,தன்னிடம் யாரும் எதையும் எதிர்பார்க்காதவரை, அவனுக்கு கடவுளை தெரிவதில்லை!


நம்மில் பளு ஏறும்போது, அதை சுமந்து நடந்து கடந்து செல்ல உடல், மன பலம் தேவைப்படும்போது, நாம் கடவுளைத் தேடிப் போகிறோம்!

தூணிலும், துரும்பிலும் இருக்கும் கடவுளை, ஆலயங்களில் தேடிப் போவதன் காரணம் என்ன?வழிபாட்டுத் தலங்களில் மட்டும்தான் கடவுள் இருக்கிறான் என்பதல்ல!

வழிபாட்டுத்தலங்கள் எல்லாம் சக மனிதர்களின் நம்பிக்கைகளின் வெளிபாட்டுத்தலங்கள்!

பரவலான மனிதர்களின். ஒருமித்த நம்பிக்கைகள் ஆலயங்களில் குவிந்து கிடக்கின்றன!
அந்த நம்பிக்கைகள் எல்லாம் நம்மை செலுத்தும் முற்போக்கு, வளர் சக்திகள்! POSITIVE ENERGY!

வழிபாடு எனும் பெயரில், அங்கு நாம் நம்பிக்கையோடு செல்வது, முற்போக்கு, பாசிடிவ்  சக்திகளை   கொடுக்கவும் பெறவுமேயன்றி, வேறொன்றுமறியேன் பராபரமே!


முற்போக்கு,வளர் நம்பிக்கைகளையே, கடவுள் அருளாகக் கருதுவோம்!

ஆலயங்களுக்கு ஆடம்பரமில்லாமல் நம்பிக்கையோடு செல்வோம்!பரிபூரண சக்தி பெற்ற நம்பிக்கையோடு திரும்புவோம்!

எதிர்பார்ப்புகளை வாசலிலேயே விட்டு விடுவோம்!