Thursday, October 11, 2012

வயசானா இல்ல..விவரம் இருந்தாதான் இனி வாத்தி!


நம்ம தலைவருக்கு திரைப்பட " வாத்தியார' கொஞ்சம் கூட பிடிக்காது..சென்ம விரோதி.! ஆனாக்க..பள்ளிக்கூட வாத்தியாருகன்னா அம்புட்டு பிரியம்!

அதே மாதிரி நம்ம செனத்துக்கும்...மிலிட்டரி வேலைக்குப் போகறத விட கவுர்மிண்ட் வாத்தியார் வேலைக்குப் போறதுல உசிரு! சரி..மிலிட்டரிக்கு வேண்டாம்..போலீசாகிறயா..வாத்தி ஆகிறயான்னா..என்ன சொல்லுவோமுனு எல்லாருக்கும் நல்லாத் தெரியும்!

கலக்டர் போஸ்ட விட பிரியமானது..அரசு வாத்தியார் வேலதான்! ஏன்னு கேட்டா..அது அப்பிடித்தான்..வெளக்கம் வேணும்னா உங்க புள்ளைகள..கவுர்மிண்ட் பள்ளிக்கூடத்துல சேத்து படிக்க வையுங்க..நீங்களே தெரிஞ்சுக்குவீங்க!


இன்னும் புரியலையா..போட்டி போட்டுட்டு எல்லா கவுர்மிண்டும் அள்ளிக் கொடுக்கறத..கேட்டு தெரிஞ்சுக்கோங்க! இப்பக்கூட ஏழு பெர்செண்ட் பஞ்சப்படி ஏத்தியிருக்காங்க! அதெல்லாம் ஆட்டாமேடிக்!

பெரைவேட் கம்பெனிகளும் கவுர்மிண்ட் வாத்திகளுக்கு சலுக கொடுக்குது! கார் வெலையில பத்தாயிரம் கம்மியாம்!

வயசானா இல்ல..விவரம் இருந்தாதான் இனி வாத்தி!


உறவுக்கார டீச்சர் ஆத்தா ஒண்ணு..நான் வாங்குன கடசி மாச சம்பளத்த வுட இப்ப வாங்குற மாச பின்சின் ஜாஸ்தின்னு..சொல்லிட்டு,,மனசாட்சி கொஞ்சம் உறுத்துதுன்னும் சொல்லிட்டு போச்சு!



கவுர்மிண்ட்/ பெரைவேட்ன்னு இல்லாம, எந்த ஒரு இடத்துல இருக்குற உத்யோகஸ்தனையும், நெனச்சு..நெனச்சு பொறாமப் பட வெக்கிற..ஒரே உத்யோகம்..கவுர்மிண்ட் வாத்தியார் உத்யோகம்தான்!

அதுவும் கவுர்மிண்ட் வாத்தியாருக மேல இந்த பெரைவேட் பள்ளிக்கூட வாத்திகளுக்கு இருக்குற வவுத்தெரிச்சல் இருக்கே..சொல்லிக்கவே முடியாது...கொஞ்ச நஞ்சமல்ல..அம்புட்டுத் தேறும்!

அவிக வவுத்தெரிச்சல் எல்லாம் சாபமா மாறி ஒண்ணு சேர்ந்து, பெரிய இடியா வந்து இறங்கிடுச்சு! கரஸ்'ல பெரிய படிப்புக படிச்சாலும் சேரி, சந்தைக்கு பின்னால இருக்குற வாத்தியார் ட்ரெய்னிஙில படிச்சலும் சேரி...வேலவாய்ப்பு ஆபீஸ்ல பதியிறது தான் ரொம்ப முக்கியமா இருந்தது! 

அடுத்த முக்கியம்..முன்னால பொறந்து இருக்குற வேண்டியது!ஒப்பற்ற "அப்பாயிஸ"க் கொள்கதான் இதுவரைக்கும்..வாத்தியார்களை முன்னேத்தி இருக்குது! அதென்னுன்னு கேப்பீக..சொல்றேன்!

'முன்னால் பிறந்தவன் அண்ணன்..பின்னால் பிறந்தவன் தம்பி!' இதாங்க அது!

இப்போ அதுக்கு வேட்டு வந்திருச்சு!
வயசெல்லாம் இனி வேகாதாம்..வரிசப்படி இனி ஆர்டர் வராதாம்!
என்ட்ரன்ஸ் எழுதணுமாம்! அதுல கிடைக்குற ரேங்க் தான் முக்கியமாம்! 

அதுலயும் பாருங்க..புதுசா அடுத்த இடி.."வெயிட்டேஜ்" வேணுமாம்.! என்னாய்யா ..வேல வேணும்னா யார வெயிட்டா கவனிக்கனுமினு நீங்க கேப்பீங்க..! அதில்லைங்..உங்க இளங்கலை..முதுகலை மார்க்க வெச்சு,,ஏத்துவாங்களாம்..உங்களுக்கு வெயிட்!
ஏனுங்..இப்படி உங்க முகமெல்லாம் வெளிறிப் போச்சு!

காலேசுக்குப் போணோம்..கன்னிகளைப் பாத்து கவித வரஞ்சோம்..அரசியல் பேசுணோம்..சினிமா போணோம்..ஸ்ட்ரைக் செஞ்சோம்..லேடியோப் பெட்டியில கரஸ் செஞ்சோம், ஜஸ்ட் பாஸ் பண்ணா போதும்னு நெனச்சோம்..இப்ப அப்பத்திய   காலேசு மார்க்கும் வேணும்னா எப்படி?
மார்க்கு வாங்குனவனுக்குத் தான் அறிவும் ..விவரமும் ரொம்பத் தெரியமான்னு ..நீங்க கேக்குறது நியாயமாத்தான் தெரியுது!

என்ன பன்றது..அம்மாவத் திட்டி என்ன பிரயோச்சனம்..மத்திய அரசோட கட்டாயாமாம் இது!

புலம்பி ஆவறது ஒண்ணுமில்லே! ஒரு ரோசனை வேணும்னா சொல்ரேன்..கேட்டுக்கோங்! இன்னம் போய் படிக்கிறதெல்லாம்..சும்மா தமாசு!
ஏதாவது ஒரு கட்சியில சேர்ந்து..மபி ஆகிடுங்க..அதாங்க மக்கள் பிரதி"நிதி"!
நம்ம தமாசுக் கவுண்டமணி சொல்றாப்புல..அந்தக் கருமத்துக்கு அதெல்லாம் தேவையில்லையப்பா!

கவுர்மின்ட் பள்ளிக்கூடத்துல...வயசுக்கு மட்டுமே வேலை இடமில்லைன்னு இப்ப வந்திருக்கு! 

அரசு காலேசுக்கு அட்மிசன் அடிதடி நடக்குற மாதிரி..அரசு பள்ளி வாசல்களிலும் "மாணாக்கர்கள் அட்மிஷன் முடிந்துவிட்டது..இனி அடுத்த வருடம் தான்" அப்படிங்கிற போர்ட் மாட்டப்படும் காலம் வரணும்! கண்டிப்பா அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்!

வாய்மையே வெல்லும்! 









Tuesday, October 9, 2012

திருட்டு மின்சக்தியை அனுபவிக்கும் தலைநகரவாசிகள்!

 கொங்கிலிருந்து சென்று வேலை நிமித்தமாக சென்னையில் வசிக்கும் நண்பர் வீட்டில் விஷேமாம்..ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.ஆனாலோ அவருக்கு கொங்கு செல்ல விருப்பமில்லை.காரணம் கேட்டால்..அந்த மின்வெட்டில் சென்று சிரமப்பட அவரால் முடியாதாம்!

என்ன செய்வது? உறைக்கும்படி  நன்கு வைதேன்....சிரித்துவிட்டு" கோபமா இருக்கிறாய் போல..அப்புறம் பேசறேன்'னு சொல்லிவிட்டு தொலை பேசியை வைத்துவிட்டார்!

பத்து நாளா அனைத்துப் பத்திரிக்கைகளிலும் பார்க்கிறேன், யாராவது சென்னைவாசிகளின் மின் திருட்டை எழுதிகிறார்களா என்று..ஊஹூம்.. மின்வெட்டை  சிறிய அளவில் எதிர்க்கும் மக்களின் போராட்டங்களை மட்டும் 13ம் பக்கத்தில்..மரணசெய்திகளுக்கு நடுவில் போட்டுவிட்டு ஒளிந்து கொள்கிறார்கள்!

திருட்டு மின்சக்தியை அனுபவிக்கும் தலைநகரவாசிகள்!




என்னய்யா..சென்னைவாசிகளைத் மின்சாரத்தைத் திருடுபவர்கள் என்று எப்படிச் சொல்லலாம்..மீட்டர் பணத்தை சரியாகத்தானே கட்டுகிறார்கள்? என்று வாதிகள் கேட்கலாம்.
ஏனைய தமிழ்வாசிகளின் மின்சாரத்தையும் சொற்ப வெட்டைத் தவிர்த்து, அலங்காரமாக அட்டகாசமாக லஜ்ஜை ஏதுமின்றி அனுபவிக்கும் தன்மையை வேறு எவ்வாறு அழைப்பது? கொள்ளை என்று அழைக்கலாமோ?

ஏனைய தமிழகம் மின்வெட்டினால் வாடி வதங்கி வாழ்வாதாரம் மறுக்கப்பட்டுத் தவிப்பதை ஆட்சியாளருக்குக் கொண்டு செல்ல அரசியல்வர்க்கமும் , அதிகாரவர்க்கம் தவிர்க்க முயல்வதை வேணுமானாலும் சகித்துக் கொள்ளலாம்...ஊடகவியலாரும் சேர்ந்து மறைப்பதை சாடியே ஆக வேண்டும்!


சனநாயகத்தின் இந்த நாலாவது தூண்களின் செங்கற்கள்..அதாங்க செய்தியாளர்கள் .பெரும்பாலானோர் வசிப்பது சிங்காரச் சென்னையிலே..இதில் பார்ப்பன..பகுத்தறிவு..புரட்சிகளும் அடக்கம்! இவங்கதான் தமிழகத்தின் தலை எழுத்தை தங்கள் பேனாவில்,மைக்கில் நிர்ணயிப்பவர்கள்!தங்களின் விருப்பங்கள்,எண்ணங்களை ஊடக வாயிலாக மக்களின்  மண்டைக்குள் திணித்து,பொதுக்கருத்தாக மாற்ற முயன்று..அதில் பலசமயம் வெற்றியை ருசிப்பவர்கள்!

இதுல ஒருத்தராவது அடடா..நாம மட்டும் 24 மணிநேரமும் வெட்டில்லாமல் சுகப்படுறோமே..மற்ற தமிழ்பகுதிகாரர்கள் வாடுகிறார்களே..எனவே தமிழக அரசே..சென்னைக்கும் மின் தடை அறிமுகப் படுத்து..மீதமாகும் மின்சாரத்தை..ஏனைய தமிழகத்துக்கு பகிர்ந்தளி 'னு யாராவது சொல்றாங்களான்னு பாருங்க!

எங்கே மற்றபகுதிகளைப் போல் சென்னைக்கும் மின்வெட்டைக் கோரினால், தங்களுக்கும் " சுகக்கேடு" வந்துவிடும் என்று தோணும்படி நடந்து கொள்கிறார்கள்!

சென்னைவாசிகளுக்கு எதற்கு "ஏ'' வகுப்பு சிறைவாசிகளுக்குப் போல் மின்சலுகை? ஏனைய தமிழ்பகுதியினர் என்ன கொடுங்குற்றம் செய்தார்கள்?

அதிகவிலைக்கு கரண்டை வாங்கி தரகுமுதலாளிக்கு கொடுக்காதே என்று அரசுக்கு ஆலோசனை கூறும் வர்க்கப்புரட்சிகள் கூட, சென்னைவாசிகளுக்கும் மின்வெட்டை அமல்படுத்து என்று  கூவ எண்ண்வில்லை என்று நினைக்கும் போது" அவாஅவா பாடு அவாளுக்கு" என்பதே நியாபகம் வருது!


பிய்த்து பிய்த்து வழங்கப்படும் மின்சாரம்.." பிச்சையை'' நினைவூட்டுகிறது. இதனால் ஏதும் பிரயோசனமில்லை..விவசாய சனியன்களுக்கும்..தரகு தொழில் முனைவோருக்கும்!


ஆகவே..சென்னைவாசிகளே..எல்லாத்தையும் நீங்களே அனுபவிச்சுக் கோங்கோ..ஒரே கோரிக்கை சென்னைவாசிகளுக்கு..ஏனையத் தமிழகத்துக்கு தடைபட்ட மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு பதிலா தடையில்லா ஒருமுனை மின்சாரம் வழங்கினால் போதும்...டிவி பார்த்துட்டு..கஞ்சிகுடிச்சிக்கிட்டு உங்களை மாதியே சொகமா இருந்துக்குவோம்..வெட்டிவேலை செய்யாம!
 விவசாயியும் ..தொழிலதிபன்களும் முடிஞ்சா ஜெனெரேட்டர் போட்டுக்கட்டும்..இல்லேன்னா திவாலாகட்டும்! அது அவனுங்க தலை எழுத்து!

இதை மட்டும் எழுதுங்க..பேசுங்க..  பரிசா  கொடுக்க எங்ககிட்ட ஈமுக் கோழிங்க நெறைய இருக்கு..ஈமு பிரியாணி வேணும்னா செஞ்சு பார்சல்ல அனுப்பறோம்!

உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போவட்டும்!