நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் வந்தனம்!
சமுதாயத்தின் எந்த மூலையில் நாமிருந்தாலும் பெரும்பாலோனோருக்கு தவிர்க்கமுடியா, விரும்பும் , மீண்டும் கிடைக்கா ஒரே தருணம் "ஹனிமூன் " என அழைக்கப்படும் "தேன் நிலவு"தான்!
தேன் நிலவு என்பது புது மணமக்கள் பெரியவர்களின் ஆசியோடு எந்தக் கட்டுப்பாடும் இன்றி பயணிக்கும் முதல் இன்பச்சுற்றுலா!இரு உள்ளங்களை இறுக்க சேர்க்கும் கனவுசுற்றுலா!
மணநாள் முடித்து ஆசிகளைப் பெற்று தூக்கம் தொலைத்து அவசர அறிமுகம் முடித்து தெய்வங்களை வணங்கி விருந்துகளை விழுங்கி ...
உடலும் மனமும் களைத்து விடும் முதல் வாரக் கடைசியில் , உறவுகளும் நட்புகளும் , கடமைகளும் கண்/ கைக்கு எட்டா தூரத்தில் இருவர் மட்டும் தனியே ...
ஏறக்குறைய ஓடிப் போவதுதான் தேன் நிலவு!..
இடம் எப்படி இருக்க வேண்டும்?
கண் முதலில் சுகப்பட வேண்டும்!
கண் வழியே மனதிற்கு சேதி செல்ல வேண்டும்!
மனம் சாந்தியடைய வேண்டும்!
இயற்கையின் பிரமாண்டமும் நர்த்தனமும்
மனதை லேசாக்கும்!
அப்போது குளிரூட்டப்பட்ட காற்றும்
மஞ்சுப் பொதிகளும் மெல்ல உடலைத்
தாக்க வேண்டும்!
கை ஜோடிகள் தானே கோர்த்துக்
கொண்டுவிடும்!
மனங்களை கொள்ளை கொண்டுவிடும்!
ஆயுசு முழுதும் இணை பிரியா பந்தம் உறுதிப்படும்!
அனைத்து வர்க்கத்தினருக்கும் ஏற்ற சிறந்த இடம், நமது
கொடைக்கானல் !
கூட்டம் இல்லா நாட்களில் அங்கு சென்று பாருங்கள்! சொர்க்கம் !
செப்டம்பர் முதல் மார்ச் வரை அபாரம்! மழைக் காலம் தவிர!
வார நாட்களையே தேர்ந்தெடுக்கவும்!
இருவழிகள் உள்ளன! கொடைரோடு-வத்தலக்குண்டு வழியாகவும், பழனியிலிருந்து புதுவழியாகவும் செல்லலாம்!மலையேற பஸ்பயணம் தான் புதுசுகளுக்கு இதம்! பைக் பயணம் தான் சிறப்பு எனினும் கவனம் சிதற வாய்ப்பு அதிகம்! கார் எனில் இருவர் மட்டும்! கடைகள் இருக்கும் இடம் தவிர வேறெங்கும் இடை நிற்க வேண்டாம்!
தங்குவதற்கும் உணவிற்கும் பர்ஸுக்கு ஏற்றார்ப்போல கிடைக்கும்!
கடமைகள்!
பொழுதுபோக்கைத்தவிர இங்கு நிறைவேற்ற வேண்டிய சில கடமைகள்:
1 அரைநாள் ஊர் உலா - வேன்களில் குழுவாக!
2 போட்டா எடுத்தல்
3 ஏரியில் படகோட்டம்
4 ஏரியைச் சுற்றி உலா அல்லது மிதிவண்டி
குறைந்த பட்சம் 3 நாட்கள் தங்குவது நலம்!
கொடைக்கானலில் இருந்து பார்த்தால் நிலவு அருகில் இருப்பது போலத் தெரியும்!
அதெப்படி மணநாள் முடிந்ததும் நிலவு வரும்? வளர் பிறையில் தானே பெரும்பாலான திருமணங்கள் நடைபெறுகின்றன! கூட்டி கழிச்சு பாருங்க...கணக்கு கரக்டா வரும்!
இதுவரை பரிந்துரை செய்து கொடைக்கானல் சென்று வந்த யாவரும் எனக்கு மிகுந்த நன்றியுடன் உள்ளனர்!
புதுசுகள் தான் செல்ல வேண்டுமா? இல்லை ! ஊடலுக்குப்பின் சமாதானத்திற்கு ஏற்ற சிறந்த இடமும் இதுதான்!பழசுகளும் செல்லலாம் ..ஆனால் இருவராக மட்டும்!
குறிப்பு: செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் - அக்டோபர் 2011 !