மேற்கு மண்டலத்தில், தி.மு.க எதிர்ப்பு அலை பலமாக அடிக்கிறது! தி.மு.க கூட்டணியில் கொ.மு.க வரவினால்,ஏற்படும் ஆதாயம், அருந்ததியினரின் எதிர்ப்பு ஓட்டுகளாக மாறி, அ.தி.மு.க கூட்டணிக்கு சாதகம்!
வடக்கில் பா.ம.க/வி.சி/தி.மு.க - அவரவர் தொகுதிகளில் மட்டுமே வேலை செய்யும் சூழல்! இதுவும் எதிரணியினருக்கு சாதகம்!
தெற்கிலும், கிழக்கிலும் தி.மு.கவினால் பலனடைந்தோர் அதிகம்! அம்மையார் ஆட்சி அவர்களின் அனுபவிப்புக்கு ஆப்பு வைத்துவிடும், என்பதை தெளிவாக உணர்ந்துள்ளனர்!
அலைக்கற்றையின் பாதிப்பு, அடிமட்டத்தில் பெரிதாக இல்லை!எவன் சம்பாரித்தால் என்ன!? நமக்கு இலவசங்கள் தொடர்ந்தால் போதும் என்ற நிலை!அவர்களில் இளவட்டங்கள், இலவசங்களை வாங்கிக் கொண்டு, கறுப்பு எம்.ஜி.ஆரின் பின்னால்!
முன்று வருடங்களாக தொடரும், எப்போது சரியாகும் எனத் தெரியாத, மின்சாரம், தொழில் நகரங்களில்/மாவட்டங்களில், பல சம்சாரங்களை முடக்கி விட்டது, தி.மு.க வின் மைனஸ்!
மத்தியில் ஜவுளி துறை மந்திரி, தயவானநிதி, கொங்குச் சீமைக்கு வரும் போதெல்லாம், பல வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டு, டெல்லி சென்றதும், சரத் பவாரைப் பார்த்து, பம்மி விடுவதால், தமிழகத்தின் முதுகெலும்பான ஜவுளித் தொழில்,சீக்கு வந்து பாயில் படுத்து விட்டது! தி.மு.க வின் அரசு ஊழியர்களின் ஆதரவு, ஜவுளி துறையினரின் எதிர்ப்புக்கு சரியாகி விடும்!
விலைவாசி உயர்வு, நடுத்தட்டு மக்களை, ஆளும் கட்சிக்கு எதிராக்கும்!
பார்லி. தேர்தலுக்கு காஙிற்கு கிடைக்கும் ஓட்டு, சட்டசபைக்கு முழுவதும் கிடைக்காது!காஙிற்கு தொடர்ந்து ஓட்டுப் போடும் முதுவட்டங்கள் பல மண்டையை போட்டுவிட்டன! ராகுலால் கிடைப்பவை, விஜெய் சென்று, புலம்பினால் மாறிவிடும்!
தி.மு.க , காங் எனும் பொதி சுமக்கும் பொறுமையான பிராணியே!
பொதுவாக தேர்தல் என்றாலே, பெரும்பான்மையோர், எந்த அணிக்கு வாக்கு அளிப்பது என்பதை தேர்தல் தேதி அறிவிக்கும்போதே, முடிவு செய்து விடுவர்! சுமார் 10 - 15 சத மக்களே, சாவடிக்கு செல்லும்வரை, முடிவில்லாமல் இருப்பர்! அவர்களைக் கவரவே, பிரச்சாரங்களும், கையூட்டுகளும்!
என்னதான் அ.தி.மு.க அணி கனவு கண்டாலும், தி.மு.க வின் தேருதல் அறிக்கையில் எதிர்வரும் இலவசங்களும், அழகிரி & கோவின் திருவிளையாடல்களும், தி.மு.க வை அரியணை, ஏற்றியே தீரும்!