Thursday, May 26, 2011

காபி..காபி.. மேரே தில் மே! - 2

 காபிக் குவளையைப் போலவே, எனது மனதை கவர்ந்தது கர்னாடக இசை!

மனதைக் கவரும் பல ராகங்களை நமது பகுதி இசை கொண்டிருந்தாலும், இந்தத் தருணத்தில் இன்றைய நட்சத்திர ராகமான,"காபி" சற்று கவர்ச்சியானது! உருகவைக்கத் தக்கது!


இசைக்கு மொழியில்லை! இனமில்லை! பாலில்லை! இனிமையான நாதம், எங்கிருந்து வந்தாலும், அதை ரசிப்பதே நல்ல ரசிகனின் அடையாளம்!

காபி ராகத்தைக் கொண்டு, புரந்தரதாசரின் " ஜெகதோதாரண" எனும் பாடலை எம்.எஸ் அம்மாவும், இதர இளையத் தலைமுறைப் பாடகர்களும் எப்படிக் கையாண்டுள்ளனர் என்பதை இங்கு கேட்டு மகிழலாம்!


 எம்.எஸ் அம்மா

  



இளையத் தலைமுறை!







பாம்பே ஜெயஸ்ரீ


காபி..காபி.. மேரே தில் மே!

 எனது தந்தை அரசாங்க உழியத்தில் இருந்ததால், பல ஊர்களுக்கு மாற்றலாகி சென்று கொண்டேயிருந்தார்! கூடவே நாங்களும்!

ஒவ்வொரு ஊரிலும், பல்வேறு குணாதிசியங்களும், பழக்கங்களும் கொண்ட மனிதர்களின் சிநேகம்! சொந்த ஊரில் அவசர வேலை ஏற்படும் பொழுதுகளில், வேலை செய்யும் ஊரிலேயே குழந்தைகளான எங்களை சில நாட்கள் விட்டுச் செல்லும் அளவிற்கு சிநேகிதத்திற்கு மதிப்பிருந்த காலமது!


அரசாங்க வேலைகளில், அப்போது பிராமண மக்கள் சற்று அதிகம்!அதனால் எனது தந்தைக்கு அவர்களின் சிநேகமும், பழக்கங்களும், ஒட்டிக் கொண்டதில் ஆச்சரியமில்லை!

அதில் ஒன்றுதான் பில்டர் காபி!"






சிறிய காபிக் கொட்டை அரைக்கும் இயந்திரம் ஒன்று, சமயலறை அலமாரியின் சிமெண்ட் கல்லில் பொருத்தப் பட்டிருக்கும்! கோவை சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளில் மட்டுமே (பச்சை நிறத்தில்) காபிக் கொட்டை கிடைக்கும்!


தினமும் காலையில் தாயாரால், கையளவு காபிக் கொட்டை வாணலியில் வறுக்கப்பட்டு, காற்றில் உலர்த்தப்பட்டு என்னிடம் தரப்படும்! அரவை எந்திரத்தில் போட்டு எடுப்பது என் வேலை!
நாங்கள் இருந்த சில ஊர்களில், பசுமாட்டை வீட்டிற்கே ஓட்டிவந்து, பால் கறந்து ஊற்றிக் கொடுப்பர்!
பால் காயுவதற்கு சற்று முன்னர், அப்பொது அரைத்த காபித் தூள், பில்டரில் தண்ணீர் கலக்கப்பட்டு, சொட்டு சொட்டாக இறங்கி கொண்டிருக்கும்!

சிறிது நேரத்தில் சரியான விகிதக் கலவை செய்யப்பட்டு, டபராவிலும், லோட்டாவிலும் காபியை ஆற்றியபடியே முன்வாசலுக்கு அம்மா செல்வார்!
எக்ஸ்பிரஸில் முகம் தொலைத்த எனது தந்தை, காபி வாடையால் கவரப்பட்டு பேப்பரை சிறிது விலக்கி, காபியுடன் மீண்டும் மறைந்து கொள்வார்!


எங்கள் வீட்டு காபிக்கு , சொந்த/ நட்பு வட்டாரத்தில் பலத்த புகழ்! எப்படியும் காலை/மாலையில் குறைந்தது 4 - 5 ஓசி காபி விசிறிகள் விஜயமுண்டு! வருத்தமேதுமின்றி பெருமையாக அவர்களுக்கு எனது அம்மா உபசரிப்பார்!

பல வருடங்களாக உழைத்த அந்த காபிக்கொட்டை அரவை இயந்திரம் , அதன் பற்களின் தேய்மானத்தால், ஒரு நாள் அட்டாலி ஏறியது! கசப்பின் காரணமாக பால்ய வயதில், காபியின் பக்கம் அதிகம் சென்றதில்லை!கல்லூரி பருவத்தில் தேநீரின் அறிமுகம்! வீட்டில் பில்டரில், வறுத்து அரைக்கப்பட்ட தூள் அகன்று, கடையிலுருந்து சிக்கரி கலந்த காபித்தூள் பில்டரில் இறங்க ஆரம்பித்தது!
தந்தையும் காலையில் மட்டுமே காபி: மற்ற வேளையில் தேநீர் என்று மாறிக் கொண்டார்!


இப்படியாக இல்லத்தில் மெல்ல காபியின் அஸ்தமனம்! வெகுநாட்கள் நீடிக்கவில்லை அந்தநிலை! என் மனைவி வரும்போதே, சூப்பர் சைஸில் காப் பில்டருடன் வந்து சேர்ந்து கொண்டார்! மனைவியின் வீட்டில் பில்டர் காபியில் டிகிரியே பெற்றுள்ளார்களாம்!

தந்தை மறுபடியும் காபிக்கே மாறி விட்டார்1 காலையில் பூஸ்ட் மட்டுமே அருந்தும் நான் கடுமையாக கிண்டலுக்கு உள்ளாகி, எனது கையிலும் காலப் போக்கில் காபித் தம்ப்ளர் திணிக்கப்பட்டுவிட்டது!


டிகிரி காபிக்கு உகந்தது பசுமாட்டுப் பால் ஒன்றே! பேக்கெட் பால் தேநீருக்கு சுமாராக இருக்கும்! காபிக்கு சகிக்காது!






டிகிரிக் காபி சூட்சமங்கள்:

1. பசும்பால் மட்டுமே! தண்ணீர் கலக்கக் கூடாது! காபியின் தேவைக்கேற்ப அவ்வப்போது காய்ச்சிக் கொள்ள வேண்டும்!
2. 20 - 30 சதம் சிக்கரி கலந்த காபித்தூள் நலம்!
3. பில்டரை சுடு தண்ணிரில் அலசி, பொருத்தி, மேல் பாகத்தில் ஒரு தேக்கரண்டி காபித் தூளுக்கு 10 - 12தேக்கரண்டி அளவு சூடான நீர் சேர்த்துக் கொள்ளவும்! சிறிது அஸ்காவும் போட்டுக் கொள்ளவும்1 இது மெதுவாக, திடமாக டிகாக்சன் இறக்க உதவும்!

4.பால் + டிகாக்சன் + சர்க்கரை = 1:7 - 10

காபியால் உற்சாகம், ஆனந்தம் கிடைப்பினும், பெண்கள் காபியைக் குறைத்துக் கொள்வது நல்லது! குறிப்பாக சைவ உணவு மட்டுமே, எடுத்துக் கொள்ளும் பெண்டிர்!





காபி உடலில் வைட்டமின் Bன் அளவை குறைத்து விடுகிறது! இதனாள் நாளடைவில் எலும்பு தேய்மானம் ஏற்பட்டு, மூட்டுவலியில் கொண்டுவந்து நடமாட்டத்தை முடக்கிவிடுகிறது! எனது அம்மா எலும்புத் தேய்மானத்தால் பாதிக்கப்பட்டு, காபியைவிட்டு, சுமார் 20 வருடங்களாகிவிட்டது!

காபி... மேரா தில்!




Tuesday, May 17, 2011

ரூபாயின் மதிப்பு 20 சதம் குறைய வாய்ப்பு?

 டிஸ்கி: இது பகிரப்பட்டுள்ள ஒரு செய்தியே! நாணய வியாபாரத்திற்கு அல்ல! மீறினால் நானோ, என்னைச் சார்ந்தோர் எவரும் பொறுப்பல்ல! அவரவர் யூக வணிகத்திற்கு அவரவரே பொறுப்பு!
Indian Banknotes




அடுத்து வரும் இரண்டு வருடங்களில், உலக நாணய சந்தையில், இந்திய ரூபாயின் மதிப்பு, சுமார் 20 - 30 சத வீழ்ச்சி அடையலாம் என "எவேல்யுசர்வ்" எனும் பொருளாதார/ வியாபார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது!

வளர்ந்த நாடுகளில் பொருளாதாரத் தேக்க நிலை நிலவுவதால், அங்குள்ள நிதி நிறுவனங்கள், இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் முதலீடு செய்கின்றன!ஒவொரு வருடமும் எந்த வளரும் நாட்டில் செய்யும் முதலீடு பாதுகாப்பாகவும், லாபகரமானதாகவும் இருக்கும் என ஆய்வு செய்து சில நிறுவனங்கள் பரிந்துரை செய்கின்றன! அதன் அடிப்படையிலெயே வெளிநாட்டு முதலீடுகள் நமது நாட்டிற்குள் வருகின்றன/ வெளி செல்கின்றன!



தற்போது வெளியிடப்பட்டுள்ள பரிந்துரை அறிக்கையில், முதலீடு செய்ய ஏற்ற நாடுகள் வரிசையில் ரஷ்யா(52+), சீனா (42+), இந்தொனேஷியா(27+)...இந்தியா(42-)

இதற்கு காரணங்களாக சொல்லப்படுபவை:

1. இந்தியப் பொருளாதாதாரத்தின் மேல் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மை!
2. நடப்புக் கணக்கில் ஏற்பட்டுள்ள பெரும் இடைவெளி!
3. வெளிநாட்டு நிதி முதலீடு சுணக்கம்!
4. மெதுவாக வெளியேறும் வெளிநாட்டு முதலீடுகள்!


வெளிநாடில் இருந்து பெறப்படும் முதலீடுகளில் முக்கியமானவை:
1. எஃடிஐ எனப்படும் நீண்ட கால முதலீடுகள் - இவைகள் பெரும்பாலும் கம்பெனிகளிலேயெ முதைஇடு செய்யப் படுகின்றன! (எ.கா- ஹோண்டா, டயோட்டா)
2. எஃப் ஐ ஐ எனப்படும் குறுகிய கால பண முதலீடுகள் - இவை இந்தியப் பங்கு சந்தைகளிலும், அரசாங்க கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப் படுகின்றன!


தற்போது நீண்ட கால முதலீடுகள் இந்தியாவின் உள்ளே வருவது குறைந்துள்ளது என்றும் குறுகிய கால முதலீடுகள் அடுத்து வரும் வருடங்களில் சுமார் 90000 கோடி ரூ அளவு இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது!

உலக சந்திஅயில் நாணய மதிப்பு பல காரணங்களுக்காக ஏறி இறங்குகிறது! அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில காலமாக 44 - 47 எனும் அளவில் இருந்து வருகிறது.


 அதிகரித்துவரும் அந்நியச் செலாவணி நடப்புக் கணக்கின் இடைவெளியின் காரணமாக, அடுத்துவரும் இரண்டு வருட காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, ஒரு அமெரிக்க டாலர் சுமார் ரூ55 - 60 அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது!

ரிசர்வ் வங்கியும், இந்திய அரசும் தக்க நடவடிக்கை எடுத்தால் பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது! இந்த அளவுக்கு, ரூபாயின் மதிப்பு குறைந்தால் வங்கி வட்டி விகிதம் மேலும் உயரும்! பணபுழக்கம் குறையும்! ஏற்றுமதியாளருக்கு லாபம்1இறக்குமதி பொருள் விலை உயரும்!

2G அலைக்கற்றை மற்றும் காமன்வெல்த் ஊழல்கள், உலகநாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் அவமானத்தையும், பெருத்த பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது!

யார் வருவாரோ? காப்பாற்ற!




Sunday, May 15, 2011

மாண்புமிகு அம்மா அவர்களே!

 மாபெரும் வெற்றியை அடைந்திட்ட, அம்மாவுக்கு வாழ்த்துக்கள்! யாரும் எதிர்பார்க்கவில்லை, இந்த அளவுக்கு மக்கள் ஆதரவு இருக்குமென்று! தாங்களும் எதிர்பார்க்கவில்லை என்று, தங்களின் முதல் பேட்டி வாயிலாக உணர்ந்தோம்! தமிழக மக்களின் ஆதரவு தங்களுக்கு கிடைத்தது என்பதை விட,கடந்த ஆட்சியின்பால், மக்களுக்கு இருந்த வெறுப்புணர்வே, தங்களை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்தியுள்ளது!

ஒழுங்கற்ற, செயலற்ற ஆட்சி நடக்கும் போதெல்லாம், அடுத்து வரும் தேர்தலில், மக்களின் கோபம், மிகப் பெரும்பான்மையுடன், ஆண்ட கட்சியைத் தூக்கி எறிந்தது, தமிழகத்தில் கண்கூடான வரலாறு!


ஊழல் மிகுந்த, ஒழுங்கீனமான ஆட்சியின் காரணமாக, தாங்கள் 1996 ஆண்டு, தோற்கடிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டீர்!2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, பழையத் தவறுகள் பெரியதாக நடைபெறவில்லையெனினும், அதிரடி ஆட்சியால், மக்களில் ஒருசாரார் ஆதரித்தாலும், பாதிக்கப்பட்டோரின், எதிர்ப்பால், 2006ல் ஆட்சியைக் கைவிட நேர்ந்தது!
கவர்ச்சி இலவசத் திட்டங்களால், 2006ல் அரியணை ஏறிய, தி.மு.கவினருக்கு, ஆட்சிக்காலத்தை, இலவசப் பொருள் விநியோகத்திற்கும், சொந்தக் குடும்பப் பிணக்குகளை நேர் செய்யவும், மத்தியில் தமது கட்சியினருக்கு, இமாலய உழல் செய்ய ஏதுவாக, பதவிப்போர் செய்தவாறும் கழித்து விட்டனர்!

பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களின் கூப்பாடு, கலைஞரின் காதுகளை சென்றடையவில்லை! இலவச இறுமாப்பு, முதுமை, சகோதர யுத்தம், பொருள் சேர்ப்பு ஆர்வம், சுயநலம், பதவி மோகம்..... இன்னும் சொல்ல நா கூசுகிறது!








அம்மா அவர்களே!

மக்கள் தங்களிடம் எதிர்பார்க்கும் நடவடிக்கைகள், கணக்கிலடங்கா எனினும், உடனடித் தேவைகள் சில இதோ!


1. பாவப்பட்ட மீனவர் கொலைத் தடுப்பு!
2. மின்சார சீரமைப்பு!
3. கடும் விலையேற்றத் தடுப்பு!
4. ஜவுளிப் பிரச்சனை!
5. சமச்சீர் கல்வி கோளாறு!
6. முறைபடுத்தப் பட்ட காப்பீடுகள்!
7. விளை பொருள் லாப விநியோகம்!
8. அண்டை மாநில உறவு மேம்பாடு - தண்ணீருக்காக!
9. உள்ளுர் தொழிற்பாதுகாப்பு!
10.களவாணிகளை ஒடுக்குதல்!
11. கல்விக் கட்டணக் கொள்ளைத் தடுப்பு!
12.இனியேனும் ஈழத்துயர் துடைப்பு!
13.சகோதரிக் குடும்ப ஒதுக்கல்!

விடுபட்டவைகளை தாங்களே அநுமாநித்து, ஆவன செய்யும்படி, வேண்டுகோள் வைக்கப்படுகிறது!


உங்களால் மட்டுமே முடியும் எனும் மக்களின், நம்பிக்கையை உறுதிப் படுத்துங்கள்!




Saturday, May 14, 2011

இலவசமும் காப்பாற்றவில்லை!

 2006ம் ஆண்டு சட்ட சபைத் தேர்தலில், கலைஞரின் கட்சி வெற்றி பெற்றதற்குக் காரணம்," கதா நாயகன்" இலவசத் தேர்தல் அறிவிப்புகளே என்று, அனைவரும் நம்பிக் கொண்டிருந்தோம்! கலைஞரும் அதனை உறுதிப் படுத்தும் விதமாக, 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்று வர்ணித்திருந்தார்!

1970 களில் கலைஞர் ஆட்சிக் காலத்தில், நிறைய குடிசை மாற்று வீடுகள், ஏழைகளுக்கு குறிப்பாக சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு, கட்டித்தரப் பட்டது! வீட்டுப் பட்டாக்கள் பலவும் விநியோகிக்கப்பட்டன! அவசரநிலை முடிந்து, நடத்தப்பட்ட 1977ம் ஆண்டு தேர்தலில், பயனாளிகள் பலரும், கலைஞரை விடுத்து, எம்.ஜி.ஆர் பக்கமே நின்றனர்! - அவர் மறைந்து பல காலம் வரை!

தன்னைத் தெரிவு செய்யும் மக்களுக்கு, நன்றி தெரிவிக்கும் பொருட்டு, மனிதாபமிக்கத் தலைவரான, எம்ஜிஆர் இலவச உடை, காலணி, பற்பொடி என்று அறிமுகப் படுத்தினார்! காமராசரின் மாணவர்களுக்கான, மதிய உணவுத் திட்டத்தை, மாற்றங்களுடன் அனைத்துக் குழந்தைகளுக்கும் பயனளிக்கும் வகையில், சத்துணவுத் திட்டமாக அமல் படுத்தினார்! அப்போது எதிரணித் தலைவர் கலைஞர், எம்ஜிஆரின் இலவசத்திட்டங்களைக் குறை கூறினார்!




எந்த ஒரு அரசும் செய்ய வேண்டிய நலத் திட்டங்களை,வோட்டுகளாக மாற்றும் தந்திரத்தை, கலைஞரின் கட்சி, முதன் முறையாக, 2006ம் ஆண்டு தேர்தலில், பயன் படுத்தினர்!

ஜெயா அம்மையாரின், 2006 ஆண்டு வரையிலான ஆட்சியில் ஊழல் குற்றச் சாட்டுகள் அதிகம் இலையெனினும், அதிரடி ஆட்சியால் மக்களின், அபிமானத்தை இழந்ததால், 2004ம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலில், ஜெ. பூஜ்ஜியத்தையே அடைந்தார்! அதன் பின்னர், ஓரளவு அம்மையார், சுதாரித்த படியால், அதனைக் கணித்த கலைஞர் அம்மையாரை வீழ்த்த எடுத்த பிரம்மாஸ்திரம் தான் இலவச டி.வி/கேஸ் மற்றும் ரூ 2/1 அரிசித் திட்டங்கள்!

கலைஞரின் 2006ம் ஆண்டு வெற்றி, இலவச அறிவிப்புகளால், கிடைத்த வெற்றி என்று, அனைத்துத் தரப்பினரும் பேசியும், நம்பியும் வந்தனர்! இலவச அறிவிப்புகளை, நடை முறைப் படுத்தும் போது, வறுமையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, ஏனையோருக்கும் விரிவு படுத்தினர்!

இலவசங்களால் வெற்றியை ருசித்த தி.மு.கவின் மேல், இலவசத்தை ருசித்தோரும்/ அர்ச்சித்தோரும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது - 2011ம்  ஆண்டு தேர்தல் அறிக்கை!
2006ம் ஆண்டு இலவச தேர்தல் அறிக்கையைப் பிரசவித்த, அதே டீம், தற்போதைய அறிக்கையையும் பல ஊர்களில்/ரிசார்டுகளில், தங்கி, மூளையைக் கசக்கி, தயாரித்து வெளியிட்டது! ஆட்சியைத் தக்க வைக்கும் சக்தியைக் கொண்டது என்றே, மிகந்த எதிர்பார்ப்புகளுடனும், நம்பிக்கையுடனும், வெளியிடப் பட்டதி.மு.கவின் 2011 தெர்தல் அறிக்கை வெகு விரைவில் பிசுபிசுத்துவிட்டது!


போட்டிக்காக ஜெ.அம்மையாரால் வெளியிடப்பட்ட, தேர்தல் அறிக்கையும் பெரிதாக மக்களால் பேசப்படவில்லை!

இலவசத் திட்டங்கள் மட்டுமே, தெர்தலில் வெற்றியை நிர்ணயிக்க முடியாது!
இலவசங்களை யாரும் தங்கள் பையில் இருந்து கொடுப்பதில்லை என்பதையும், அவைகளில் சில (எ.க) உணவு,கல்வி, மருத்துவம் சார்ந்தவை அனைத்தும், வறுமையில் வாடுபவர்க்கு, அவசியம் செய்யப்பட வேண்டிய/ இதுவரை மறுக்கப்பட்டவையே என்பதையும், மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதையும், இத் தேர்தல் ஆட்சி மாற்றம் புரிய வைத்துள்ளது!

ஒவ்வொருத் தேர்தலிலும், ஆட்சி மாற்றத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன! கவர்ச்சி இலவச அறிவிப்புக்களால், ஓரளவு பாதிப்பைக் குறைக்க முடியுமே தவிர, கடைத் தேங்காயை,வழிப்  பிள்ளையாருக்கு எப்போதும் உடைத்துக் கொண்டிருக்க முடியாது!

Thursday, May 5, 2011

உசாமா பின் லேடனின் இளைய மனைவி!

 உசாமா பின் லேடனுக்கு மொத்தம் ஐந்து மனைவியர் என்று கூறப்படுகிறது! அதில் ஒருவர் விவாகரத்து செய்யப்பட்டு விட்டார்! மூன்று மனைவியர் தற்போது சிரியா நாட்டில் தமது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்!


அமெரிக்க கடற்படை கமேன்டோக்களால், பின் லேடன் தாக்கப்பட்ட போது,அவருடன் அவரது இளய மனைவி அமல் என்பவரும் உடன் இருந்ததாகத் தெரிகிறது!

 தனது கணவரைக் காப்பாற்றுவதற்காக, மிகத் தீவிரமாக அமெரிக்கப் படையினரை அமல் லேடன், எதிர் கொண்டதாகவும், அவரை அப்புறப்படுத்துவதற்காக, அவரின் காலில் சுட்டுள்ளனர்! பிறகே உசாமாவை அமேரிக்கப் படையினரால் நெருங்க முடிந்துள்ளது!

அப்போது உசாமாவோ, அவரது மனைவியோ ஆயுதம் ஏதும் தரித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

 அமலின் கடவுச் சீட்டு, உசாமா தங்கி இருந்த மாளிகையிலிருந்து  கண்டெடுக்கப்பட்டுள்ளது!. அமல் லேடன் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அமலின் டீனேஜ் பருவத்திலேயே, லேடனுடன் அவருக்கு திருமணம் நடந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது!




PHOTO:  The wife of Osama Bin Laden injured in Sunday's raid was his youngest, 29-year old Amal Ahmed Abdul Fatah.


அமல் லேடன் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள்! இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் மகவு! பின் லேடனுக்கு மொத்தம் 18 குழந்தைகள் இருப்பதாக அறியப் பட்டுள்ளது! இதில் யாரும் தன் தந்தையை இதுவரை, பின்பற்றி இருக்கவில்லை!

உசாமா தனது 15 வயதில், தன்னுடைய சகோதரங்களுடன்!