Tuesday, December 25, 2012

தற்கொலை பூமியாகும் தஞ்சையில்...!

தற்கொலை பூமியாம் தஞ்சையில்..ஆறுகளில் சில இடங்களில் தடுப்பணைகளில் சிறிது நீர் தேங்கி உள்ளது..இனி இரண்டு வாரங்கள்  சென்றால்..அவையும் ஆவியாகிவிடும்!அதுவும் மேல் ஆயக்கட்டுகளில் தான் இந்த நிலை!..நாகை..திருவாரூர் போன்ற வடிகால் பகுதிகளில் வயல்வெளிகளில் நிஜமாகவே மாடுகள் மேய்ந்து வருகின்றன!

அந்த சோகத்தைப் படம் எடுக்க மனம் சிறிதும் ஒத்துழைக்கவில்லை..!

தஞ்சை விவசாய மக்கள் ஏற்கெனவே சிறுகடன் வலையில் சிக்கித் தவிப்பவர்கள்! பயிர் செத்ததால்..கடன் பயங்கரம் வட்டியுடன் வந்து கண்முன்னே கூத்தாடுவதால்..வழி தெரியாமல் உயிர்கள்செத்துக் கொண்டிருக்கின்றன..தவணை முறையில் !

மக்கள் சந்திப்பு..அவசியம் தேவை..இக்கணம்!
 அரசு மறுக்க, மண்ணின் மைந்தன் பேனாவில் மட்டுமே கண்ணீர் வடிக்க, எதிர்க்கட்சி இயங்காமல் இருக்க.அம்மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லுவது யார்?

 எப்போதும் " மிஸ்ஸிங் டைமிங்" போராட்டப் புயல் தலைவர்!
தஞ்சை தரணி தண்ணீர் இன்றி காய்கிறது.     அங்கு சென்று மக்களை   சந்திக்கலாமே!


தானைத் தலைவர் தன் படைப்பரிவாரங்களைக் கொண்டு..தில்லியிடம் பேசி..நிவாரணங்களைப் பெற்றுத் தரலாமே !

 ஆள்வோர் அரசு இயந்திரங்களை முடுக்கி விட்டு..பயிர்கடன், டீசல் மானியம், போன்ற மற்ற உதவிகளை செய்யலாமே..முழுவீச்சில் !



 சுனாமி, வெள்ளம் போல மழைஇன்மையும் அதனால் வரும் பஞ்சமும் ..ஒரு பேரிடர் தான்!
தஞ்சை விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர்....!

நாங்கள் இருக்கிறோம்..நம்பிக்கை இழக்காதீர் என தஞ்சைவிவசாயிகளை மட்டுமல்ல..தமிழக விவசாயிகள் அனைவருக்கும் ஆறுதல் கூற வேண்டிய கடமை..மத்திய, மாநில ஆள்வோருக்கு உண்டு!

 


விவசாயத் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும்..அது நம் முதல்வர் கையில் தான் இருக்கிறது..! விதைத்த செலவையாவது மானியமாகக் கொடுத்தேயாக வேண்டும்!

இந்த தடவை நாம் விவசாயியைக்  கைவிட்டோமானால்   ..விவசாயமே செத்துவிடும்..!

நம்பிக்கையுடன் காத்திருக்கும் தமிழக விவசாயிகள்!










Friday, December 21, 2012

வைகுண்ட வாசனின் மார்கழி ஏகாதசித் திருவிழா !

 2012ல் டிசம்பர் 23ம் தேதி..வைகுண்ட ஏகாதசி..ஞாயிறு காலை ஆரம்பித்து..24ம் தேதி திங்கள் காலை நிறைவுறுகிறது ! பெரும்பாலான வைணவத் தலங்களில் ஞாயிறு இரவு முழுக்கக் கொண்டாட்டங்கள்.திங்கள் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு !

விரதம் மேற்கொள்பவர் ஞாயிறு காலையில் ஆரம்பித்து..ஞாயிறு இரவு கண்விழித்து..திங்கள் அதிகாலை வைகுண்ட வாசல் கடந்து..திங்கள் மாலை வரை விரதம் தொடர்ந்து அரிசியை பின்னமாக்கி சமைத்து சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும் ! ( ஒரு பட்டரிடம் அறிந்தது )

விரதகாலம் பால்பழம் அருந்தலாம்..நீராகரம்..சிறிது சிறிதாக அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் ! திட உணவை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் ! ( புதிதாக இருப்பவர்கள் ..முடியவில்லை எனில் வெங்காயம் போடாமல் உப்புமா சாப்பிடலாம் )

வைகுண்ட வாசனின் மார்கழி ஏகாதசித் திருவிழா !



பூலோக சொர்க்கமாம் திருவரங்கத்தில் கூட்டம் அலை மோதும். கடந்த சில வருடங்களாக கட்டணதரிசன முறை அமல்படுத்தப்பட்டு, சிறப்பாக நடைபெறுகிறது. வரிசைதான் என்றாலும், நேரம் எடுத்துக்கொண்டாலும், எளிதில் தரிசனம் கிடைக்கிறது.!

 உற்சவர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி இருப்பது அழகு..!ஆடல்..பாடல்கள் அங்கு அரங்கேறிய வண்ணம் இருக்கும்!

திருப்பதியில் மிகுந்த பக்தர்களை எதிர் பார்த்து ஏற்பாடுகள் நடக்கின்றன ! திருவல்லிக் கேணியில் சுமார் 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது ! 


திருவரங்கன் திருவடியே சரணம்!



Monday, December 10, 2012

நீ ..நீ நடிகனாகவே இரு! தலைவனாக வேண்டாம்..!

 வந்தாரை வாழவைக்கும் எல்லா தேசமும்..
வந்தாரையும் கொண்டாடும் தமிழ்தேசம் !

தலைவன் என்று பேரும் சூட்டும்..
திலக'மிட்டு முடி'யும் சூட்டும்!


அரிமாயனை கும்பிடுவர் எம்மக்கள்..
திரைமாயரை நம்பிடுவர் அம்'மாக்கள்!



நிழல் போலே நிஜத்திலும்
இருக்கிறாய்..சரி!
இருப்பாய்..
என்றெண்ணி
நிஜமாகவே உன் நிழல்போல்
எம்மக்கள்!

நீ ..ஒரு தாரகை!  தலைவனாக வேண்டாம்..!


உள்ளூர் சாதித் தலைவர்கள் சலித்தவேளையில்
வெளிச்சமிட்டு வந்த மேனனின்
புன்னகையில் மயங்கி..
மகுடம் சூட்டி மகிழ்ந்தனர் எம்மக்கள்!
 அம்மக்கள் பெற்றமக்கள்
அதே வழியில் ராசனாக்க
ராயரை எண்ணி எண்ணி
இருந்த வேளையில்
உனக்கும் ஆசை வந்து வந்து
போகப் போக
வானத்து சந்திரனானாய்..
ரசிகனின் கண்மூடி கண்மூடி ரசித்தாய்!


நீ ஒரு ஆலமரம்..
உன்னோடு வளரலாம்
என உளறித் திரிந்தோர்க்கு
பேரன்கள் பிறந்துவிட்டனர்..!




கலை பொதுவல்ல..அது சுயம்..லாபம் !
அரசியல் பொது..அது பளு..தொல்லை !
என முடிவெடுப்பதற்கு
அறுபது அகவைகள்
கடந்து விட்டன!



ஐந்து வருடம் ஒருமுறை "வாய்ஸ்" மலர்வது
மகாமகத்தையும்..குறிஞ்சிக்கும் ஒப்பானது!


காவிரியில் துவைக்கப்பட்ட உன் சட்டை
உன் மறுபிறவியில் மன்னிக்கப்பட்டு விட்டது!


நதிநீருக்கு நீ அளித்த கோடி..
கரைந்துவிட்டது நதிகளின் சங்கமத்தில் ஓடி!
மகள்களின் திருமணத்தில் நீ அளித்த விருந்து..
பீமராஜனாம் ரசிகர்களுக்கு பெரு மருந்து!




எல்லா வயசுலயும் உண்டு..
எல்லா அமைப்பிலும் உண்டு..
எல்லா தேசத்திலும் உண்டு..
அவை உன் திரைநடிப்பெனும் பூவை
சுவைக்க சுற்றும் வண்டுகள்!
அவற்றுக்குத் தேனை அள்ளித்தா!
அறிவுரை எனும் கஷாயம் வேண்டாம்!

உன்வழி அதுதான்...
ஆம்..தனிவழி!
அதுவே பெருவழி..
வேண்டாம் உனக்கு வேற்று  படுகுழி..!

நீ
தலைவனாக வேண்டாம்..
தாரகையாகவே இருந்து கொள்!






வாழிய பல்லாண்டு..!
வாழிய ஐஸ்வர்யங்களுடன்..!
வாழிய புகழுடன்!